Thanks anitha

Saturday, August 28, 2010

கொல்லிப்பாவை

[kollipavai.jpg]
பாவை என்ற சொல்லுக்கு பொம்மை என்று பொருள் உண்டு. கொல்லிப்பாவை பற்றிய பல செய்திகளையும் சங்க இலக்கியத்தில் காணமுடிகிறது. அவற்றை எடுத்தியம்புதாக இவ்விடுகை அமைகிறது.

கொல்லிமலை வல்வில் ஒரி என்னும் வள்ளலுக்கு உரியது. காரி என்பவன் ஓரியை வென்று அம்மலையைச் சேரனுக்கு ஈந்தான். இம்மலையின் மேற்குப்பகுதியில் சூரியஒளிபடுமாறு மேற்கு நோக்கியவாறு தெய்வத்தால் அமைக்கப்பட்ட பாவை ஒன்று இருந்ததாக நூல்கள் உரைக்கின்றன. இப்பாவை கொல்லிப்பாவை எனப்பட்டது. இது கண்டோரை மயக்கி வீழ்த்தி உயிர்விடச் செய்யும் ஆற்றல் கொண்டதாகக் கூறப்பட்டது. அழியாத அழகுடைய தலைவிக்குக் கொல்லிப்பாவையை உவமையாகப் பல பாடல்கள் குறிப்பிடுகின்றன.


சான்று-1

களவுக்காலத்தில் தாம் வரும் பாதையின் துன்பம் எண்ணி அஞ்சிய தலைவியிடம் தலைவன்,

“பயன்மிக்க பலா மரங்களைக் கொண்ட கொல்லிமலையின் மேற்குப் பகுதி சார்ந்த மலையிடத்தே முன்பு தெய்வத்தாலே வடிவமைத்து வைக்கப்பட்ட புதிய வகையில் இயங்குகின்ற பாவையானது, விரிந்து பரவும் சூரியனது வெயிலிலே தோன்றி நின்றது போன்ற உன் அழகிய நலம் கருதி வருவேன்.
அவ்வாறு வரும்போது உன் உடம்பிலிருந்து பரவும் ஒளியே எங்கும் பரவி இருளைப் போக்கும் நீ அஞ்ச வேண்டாம் என்கிறான்.இதனை,

'பயம் கெழு பலவின் கொல்லிக் குட வரைப்
பூதம் புணர்த்த புதிது இயல் பாவை
விரி கதிர் இள வெயில் தோன்றி அன்ன, நின்
ஆய் நலம் உள்ளி வரின், எமக்கு
ஏமம் ஆகும், மலைமுதல் ஆறே.

(நற்றிணை-192-8-12.)

என்ற பாடலடிகள் விளக்கும்.

சான்று-2

கொல்லி மலையிலே கலை வல்லான் ஒருவனால் இயற்றப்பட்ட ஒப்பில்லாத பாவையோ?
படைத்தல் தொழில்வல்ல அயனால் நல்ல மகளிருடைய உறுப்புகள் எல்லாம் ஒரு சேரக்கொண்டு படைக்கப்பட்டவளோ?
அன்றி ஆடவரின் மேலுள்ள வெறுப்பாள் தன்னைக் கூற்றம் என்று பிறர் அறியாதபடி மறைத்து பெண் வடிவு கொண்டு வந்த கூற்றமோ..?

என்று தலைவியின் அழகு நலத்தை வியக்கிறான் தலைவன். இதனை,

“ஈங்கே வருவாள் இவள் யார் கொல்? ஆங்கே, ஓர்
வல்லவன் தைஇய பாவைகொல்? நல்லார்
உறுப்பு எலாம் கொண்டு, இயற்றியாள்கொல்? வெறுப்பினால்,
வேண்டு உருவம் கொண்டதோர் கூற்றம்கொல்?“

(கலித்தொகை-56-6-9)

அடிகளின் வழி அறியலாம்.
சான்று-3

பாங்கர் கூட்டத்தில், தலைவி பெறுதற்கரிய காவலையுடையவள். அவளை எண்ணி நீ வருந்துவதில் எந்தப் பயனுமில்லை என்று தலைவனை நோக்கிப் பாங்கன் உரைத்தான். அதற்குத் தலைவன்,

“ எக்காலத்தும் அழியாத கொல்லிப்பாவை போல என்னுள்ளத்தே தங்கினாள் தலைவி, அவளை எவ்வாறு மறத்தல் கூடும்? என்று கேட்கிறான் தலைவன்.
இதனை,

5 செவ் வேர்ப் பலவின் பயம் கெழு கொல்லித்
தெய்வம் காக்கும் தீது தீர் நெடுங் கோட்டு,
அவ் வௌ் அருவிக் குட வரையகத்து,
கால் பொருது இடிப்பினும், கதழ் உறை கடுகினும்,
உரும் உடன்று எறியினும், ஊறு பல தோன்றினும்,
10 பெரு நிலம் கிளரினும், திரு நல உருவின்
மாயா இயற்கைப் பாவையின்,
போதல் ஒல்லாள் என் நெஞ்சத்தானே.


பரணர்

(நற்றிணை-201-5-12)

என்னும் அடிகள் உரைக்கும்.
மேலும்

“பாவை அன்ன வனப்பினள் இவள்“ (நற்றிணை-301-6)
“நல்லியற் பாவை அன்ன“ (குறுந்தொகை-89-6)
“வல்வில் ஓரி கொல்லிக் குடவரைப்
பாவையின் மடவந் தனளே“ (குறுந்தொகை-100-5-6)
“ஓவத் தன்ன இடனுடை வரைப்பிற்,
பாவை அன்ன குறுந்தொடி மகளிர்“ (புறநானூறு-251-1-2)

என்னும் அடிகள் வாயிலாகவும் தலைவியின் அழகு நலம் கொல்லிப்பாவையேடு ஒப்பிட்டமை உணரலாம்.

இன்றைய நிலையில்..


கொல்லிப்பாவை காவல் தெய்வம் என்றும், கொல்லிமலையில் வாழும் மக்களுக்கு நன்மை செய்வதற்காக சித்தர்களால் உருவாக்கப்பட்டது என்றும் நம்பிக்கை உள்ளது.

மனிதர்களைக் கொல்லும் பாவையின் திருவுருவங்கள் அங்கு பல இடங்களில் இருந்ததாலும்; மனிதர்களையும் பிற உயிரினங் களையும் இழுத்துக் கொள்ளும் மரங்கள் அந்தப் பகுதியில் இருந்ததாலும் அந்த மலைக்கு "கொல்லிமலை' என்று பெயர் வந்ததாக அந்த ஊருக்கான பெயர்க்காரணம் உரைக்கப்படுகிறது.


சங்கத் தமிழரிடமிருந்த நம்பிக்கை இன்று வரை தொடர்ந்து வருவது வியப்பிற்குரிதாகவே உள்ளது. இந்நிலையில் இதிலுள்ள உண்மையை நோக்கும் போது மக்களின் நம்பிக்கை மட்டுமே மிஞ்சுகிறது. கொல்லிப்பாவையால் யாரும் கொல்லப்பட்டதற்கான குறிப்புகளை எங்கும் இல்லை..

ஏதோ ஒரு ஓவியமோ, சிற்பமோ மிகவும் நன்றாக இருந்தால் அதனை நாம் உயிரோட்டத்துடன் உள்ளது என்று கூறுவதுண்டு. உயிர் அந்தப் படைப்பில் இருப்பதில்லை.
நம் அழகுணர்வு மட்டுமே அங்கு உள்ளது.

ஆகாயகங்கை அருவி

படிமம்:Kolli Malai Aagaya Gangai Falls.jpg
ஆகாயகங்கை அருவி இந்தியாவின் தென் மாநிலமான தமிழ் நாட்டில், நாமக்கல்லுக்கு அருகில் உள்ள கொல்லி மலையிலுள்ள அய்யாறு ஆற்றின் மீது அமைந்துள்ளது.

கொல்லி மலையில் அமைந்துள்ள அரப்பளீஸ்வரர் கோயிலுக்கு அருகில் ஆகாயகங்கை அருவி உள்ளது. இங்கு செல்ல தமிழக அரசின் சுற்றுலா துறை படிக்கட்டுக்கள் அமைத்துள்ளது.

அருவியிலிருந்து வெளிவரும் நீரானது கிழக்கு நோக்கி பாய்ந்து திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் புளியஞ்சோலை பகுதியை அடைகிறது.